இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். 


மாநிலங்களவை தேர்தல்:


இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். 


கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. 


14 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுதன்ஷு திரிவேதி, உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் ஆகியோர் பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


வேட்பாளர்களை அறிவித்த பாஜக:


மேலும், 13 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பாஜக தேசிய தலைவர் நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர, கோவிந்த்பாய் தோலாகியா, மயங்பாய் நாயக், ஜஸ்வந்த் சிங் சலாம்சிங் பர்மர் ஆகியோரும் பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர்.


அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அசோக் சவான், மேதா குல்கர்னி, அஜித் கோப்சட்டே ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், உமேஷ் நாத் மகாராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.


 






காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளார். ராஜஸ்தானில் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு அவர் போட்டியிட உள்ளார். 


இதையும் படிக்க: கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை.. கன்னட மொழி கட்டாயம்.. சாட்டையை சுழற்றிய சித்தராமையா!