Farmers Protest 2.0: டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக படையெடுத்த விவசாயிகள் மீது 2வது நாளாக கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர்.
தலைநகரில் 2வது நாளாக தொடரும் பதற்றம்
டெல்லியின் எல்லை பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்பது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிய போராட்டத்தை விவசாய அமைப்புகள் அறிவித்தன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இது மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. விவசாய சங்கங்கள், மத்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நேற்று தொடங்கியது.
2வது நாளும் கண்ணீர் புகை குண்டு வீச்சு:
நேற்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது. நள்ளிரவிலும் அந்த பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, நாளை வரை 7 இடங்களில் இணைய சேவை முடக்கியது அரசு. அதன்படி, அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், சிர்சா ஆகிய இடங்களில் நாளை வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சொல்வது என்ன?
இந்த பரபரப்பான சூழலில் பஞ்சாப் கிசான் மஸ்தூர் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வான் சிங் கூறுகையில், "இந்திய வரலாற்றில் இது ஒரு இருண்ட நாள். விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஷம்பு எல்லையில் சுமார் 10,000 பேர் உள்ளனர். விவசாயிகள் அமைதியான சூழ்நிலையை பேணி வருகின்றனர். இருப்பினும், விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.