பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதா:


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் எம்.பி.யான கிரோடி லால் மீனா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில்  இந்திய பொது சிவில் சட்ட மசோதா 2020-ஐ, தனி நபர் மசோதாவாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதில், அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை  தயாரிப்பதற்கான அரசியலமைப்பின் தேசிய ஆய்வு மற்றும் விசாரணைக் குழுவை அமைப்பதற்கும், நாடு முழுவதும் அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.


எதிர்க்கட்சிகள் கடும் அமளி:


இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பிட்ட தனிநபர் மசோதா, நாட்டில் நிலவும் சமூக கட்டமைப்பையும், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நிலையையும் மொத்தமாக அழித்து விடும் என கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.






தனிநபர் மசோதா மீது வாக்கெடுப்பு:


அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழ் உள்ள ஒரு பிரச்னையை எழுப்புவது உறுப்பினரின் சட்டபூர்வமான உரிமை. இந்த விஷயத்தை சபையில் விவாதிக்கட்டும். அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, மசோதாவை விமர்சிக்க முயற்சிப்பது தேவையற்றத  என  கூறினார். இதையடுத்து மசோதாவை விவாதிப்பது தொடர்பாக, குரல் வாக்கெடுப்பு நடத்த அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் உத்தரவிட்டார். அப்போது, மசோதாவிற்கு ஆதரவாக 63 உறுப்பினர்களும், எதிராக 23 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.


எதிர்க்கட்சிகள் கருத்து:


இதையடுத்து, நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு சமூகங்களுடனான பரந்த பொது ஆலோசனையின்றி, மக்களின் வாழ்வில் இத்தகைய பரந்த மாற்றங்களைக் கொண்ட மசோதாவை அறிமுகப்படுத்த முடியாது என்று ஒரு எம்.பி பேசியதாக லைவ் லா தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று திமுகவின் திருச்சி சிவா கூறியுள்ளார்.


 


பொது சிவில் சட்டம்:


பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.  பெரும்பான்மையான நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில், உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டம் மூலமே அமைந்துள்ளது. இதனை திருத்தி அமைக்க உச்சநீதிமன்றம் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் என பலர்  வலியுறுத்தி இருந்தாலும், இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.