நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று வலியுறுத்தினார்.


நாடாளுமன்ற நடைமுறை விதிகளை பின்பற்றுமாறு எம்பிக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், "வரலாற்று மைல்கல்லை எட்டி இருக்கிறோம். அதாவது நமது அரசியலமைப்பின் 100ஆம் ஆண்டை எட்டுவதற்கு முந்தைய கால் நூற்றாண்டின் தொடக்கமாக நேற்று இருந்தது.


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி:


தேசியவாத உணர்வால் வழிநடத்தப்படும் மாநிலங்களவை, 1.4 பில்லியன் மக்களுக்கு நம்பிக்கையின் சக்திவாய்ந்த செய்தியை அனுப்பி, அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களுக்கான நமது உறுதிப்பாட்டையும், இந்தியா@2047-ஐ நோக்கிய நமது பயணத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும்.


இந்த வரலாற்று வாய்ப்பை நாம் தவறவிட்டோம் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களின் கூட்டு விருப்பங்களை எதிரொலிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள், ஆக்கப்பூர்வமான ஈடுபாடு ஆகியவை இருந்திருக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.


 






இந்த அவை வெறும் விவாத அரங்கம் மட்டுமல்ல. நமது தேசிய உணர்வு இங்கிருந்தே எதிரொலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இடையூறு ஒரு தீர்வல்ல. அது ஒரு நோய். இது நமது அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது. இது நாடாளுமன்றத்தை பொருத்தமற்றதாக மாற்றுகிறது.


மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பு கடமையிலிருந்து நாடாளுமன்றம் விலகும்போது, தேசியவாதத்தை, மேலும் ஜனநாயகத்தை வளர்ப்பது நமது கடமையாகும். அர்த்தமுள்ள உரையாடலின் உணர்வை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாரம்பரிய சிந்தனைமிக்க விவாதத்திற்கு திரும்புவோம்" என்றார்.


இதையும் படிக்க: Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?