IND-PAK Tension: ”நீங்கள் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அது, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நடைபெறும்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் பேச்சு:
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த நாடு முழுவதும் இன்னும் கனலாய் எரிந்துகொண்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “இந்தியாவின் மீது தீய எண்ணத்துடன் பார்வையை செலுத்துபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.
”ஆசைபட்டது நடக்கும்”
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சனாதன் சமஸ்கிருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “பாதுகாப்பு அமைச்சராக நாட்டில் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து நாட்டின் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எனது கடைமை. இந்தியாவின் மீது தீய பார்வையை செலுத்தியவர்களுக்கு, பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தக்க பதிலடி கொடுப்பதும் எனது கடைமையே. பிரதமர் மோடியின் பணி நெறிமுறை மற்றும் விடாமுயற்சி குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய தீர்மானம் மற்றும் திறன் குறித்தும் நாம் அறிந்ததே. வாழ்க்கையில் ஆபத்தான முடிவுகளை எடுப்பது குறித்து அறிந்து இருக்கிறார் என்பது நாம் அறிவோம். எனவே, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீங்கள் அனைவரும் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடைபெறும்” என குறிப்பிட்டார். அதவாது பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என சூசகமாக அமைச்சர் விளக்கினார்.
”இந்தியாவின் பலம்”
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியாவின் பலம் அதன் ஆயுதப்படையில் மட்டும் சார்ந்தது இல்லை. அதன் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் உள்ளது. உருவம் கொண்ட நமது நாட்டின் எல்லைகளை தைரியம் மிக்க நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வருகின்றனர். அதேநேரம், நமது முனிவர்களும், ஞானிகளும் நமது நாட்டின் ஆன்மீக வடிவத்தை பாதுகாத்து வருகின்றனர். நமது வீரர்கள் போர்க்களத்தில் போராடும்போது, நமது துறவிகள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் போராடி வருகின்றனர்.
”முனிவர்களிடம் ஆசி”
ராஜநீதி என்ற சொல் ஆட்சி மற்றும் கொள்கைகளால் ஆனது. இதன் பொருள் தேசத்தை செழிப்பான பாதைக்கு இட்டுச் செல்லும் ஆட்சி என்பதாகும். ஆனால், தற்போதைய சூழலில் ராஜநீதி என்ற சொல் அதன் உண்மையான சாராம்சத்தையே இழந்துவிட்டது. அந்த வார்த்தை அதன் அசல் கண்ணியத்தை மீண்டும் பெறுவதற்காக நான் மதிப்பிற்குரிய துறவிகளின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்” என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.