பாஜக அரசு கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேசிய ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இம்மாதிரியான பல்வேறு குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 


பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான பாஞ்சஜன்யா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அவர், "பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள், பாஜக அரசாங்கங்கள் எந்தவொரு ஊடக அமைப்புக்கும் எந்தவித தடையையும் விதிக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். யாருடைய பேச்சுரிமையையும் ஒடுக்கியதில்லை" என்றார்.


கடந்த 1951ஆம் ஆண்டு, அரசியலமைப்பின் 19ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை மேற்கோள் காட்டி பேசிய ராஜ்நாத் சிங், "பேச்சுரிமையை தடுக்கும் வகையில் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் அரசு திருத்தியது. நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.


சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இன்று ஊடக சுதந்திரம் மீறப்படுவதாக குற்றம் சாட்டுபவர்கள், அது அடல்ஜியின் (முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்) அரசாக இருந்தாலும் அல்லது (பிரதமர் நரேந்திர மோடியின் அரசாக இருந்தாலும் சரி, எந்த ஊடகத்திற்கும் தடை விதிக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். எவருடைய பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் எந்த வகையிலும் ஒடுக்கப்படவில்லை.


காங்கிரஸ் கட்சியின் முழு வரலாறும் எல்லா வகையான சுதந்திரங்களையும் மீறும் சம்பவங்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் அரசு பேச்சுரிமையை தடுக்க அரசியல் சட்டத்தை கூட திருத்தியது. 


கண்ணாடி வீடுகளில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக்கூடாது. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். அதன் சுதந்திரம் வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது" என்றார்.


பாஞ்சஜன்யா வார இதழ் மீது விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்புடைய வார இதழின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை தேசியவாத பத்திரிகை மீதான தாக்குதல் மட்டுமல்ல. கருத்துச் சுதந்திரத்தின் மீதான முழுமையான மீறலும் ஆகும்" என்றார்.


சமீபத்தில், மக்கள் பிரதிநிதி எல்லை மீறி பேசுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது. வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் நால்வர், "பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் விதிகள் எதுவும் தேவையில்லை. 


அரசியல் சாசனத்தின் 19 (1), 19 (2) பிரிவுகளின் கீழ் கருத்து சுதந்திரத்துக்கு, எந்த அளவுக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறதோ... அதுவே மக்கள் பிரதிநிதிகளுக்கும் (அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்) பொருந்தும். அவர்களுக்கென கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. 


தற்போது பேச்சுரிமை தொடர்பாக நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளே போதுமானதாக இருப்பதாகக் கருதுகிறோம். அதேபோல அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளுக்கும் அவர்கள் விடும் அறிக்கைகளுக்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்றனர்.