பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருப்பது சர்வதேச அரங்கில் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் உறவு:
வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் ஒரு நடிவடிக்கை எடுக்க வேண்டுமானால், அது பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.
ராஜ்நாத் சிங் கூறியது என்ன?
அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஏனென்றால், நீங்கள் ஒரு நண்பரை மாற்றலாம். ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்ற உண்மை எனக்குத் தெரியும். பாகிஸ்தானுடனான நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறோம். ஆனால், முதலில் அவர்கள் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.
காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் தினம், தினம் நடந்து வருகிறது. பயங்கரவாதச் செயல்களில் இந்துக்களா கொல்லப்படுகிறார்கள்? நான் உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். பயங்கரவாதச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உயிர் இழந்ததை நான் அறிவேன். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 85 சதவீதம் பேர் முஸ்லிம்கள்" என்றார்.
இந்தாண்டின் இறுதியில் ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.