ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு இன்று ஜாமின் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பல முறை பரோல் கொடுக்கப்பட்டாலும் ஜாமின் மட்டும் அவருக்கு கிடைக்கவே இல்லை. பலமுறை நீதிமன்றங்களை நாடியும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டே இருந்தது. இந்நிலையில்தான் இன்று ஜாமின் பெற்றுள்ளார் பேரறிவாளன்(Perarivalan).


காரசார வாதங்களுக்கு பிறகே இந்த ஜாமினும் அவருக்கு கிடைத்துள்ளது. பரோல் காலங்களில் நீதிமன்றம் சொன்ன விதிகளை மதித்து நடந்தது, நீண்டகால சிறைவாசம், பேரறிவாளனின் கல்வித்தகுதி முதலானவற்றை குறிப்பிட்டே இந்த ஜாமினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆனாலும் பேரறிவாளனின் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான வாதங்களை மத்திய அரசு தரப்பு முன் வைத்தது. ஆனாலும் மத்திய அரசு வாதங்களை எதிர்கேள்விகளால் சுக்குநூறாக்கிய நீதிபதிகள் ஜாமினை வழங்கியுள்ளனர்




மத்திய அரசின் வாதம்...


ஜாமினுக்கு எதிராக வாதாடிய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நட்ராஜ், “இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்னவென்றால் அவருடைய கருணை மனு பரிசீலனையிலுள்ளது. ஆகவே அவர் ஜாமீனில் வெளியே இருக்க வேண்டும் என்பது தான். அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கெனவே இவர் இந்த சலுகையை பெற்றுவிட்டார். அதாவது அவருடைய கருணை மனு நீண்ட காலம் கிடப்பில் உள்ளதால் தான் அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ” எனக் கூறினார். 


அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மாநில அரசின் அமைச்சரவை எடுத்த முடிவை ஏன் ஆளுநர் ஏற்கவில்லை. அதை ஏன் ஆளுநர் மத்திய அரசிற்கு அனுப்பினார். அவர் மாநில அரசை தானே நிர்வகிக்கிறார்?” என் கேள்வி எழுப்பினார். 


அதற்கு கூடுதல் வழக்கறிஞர் நட்ராஜ், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ன்படி  குடியரசுத்தலைவருக்கு  மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. அவர் மத்திய அரசின் அதிகாரம் உள்ள சட்டங்களில் மூழமாக கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு குடியரசுத் தலைவர் தான் மன்னிப்பு வழங்க முடியும். பேரறிவாளன் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது” என்றார்.




மத்திய அரசின் வாதங்களை கடுமையாக எதிர்த்து பேசிய நீதிபதி, தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கலாமே? ஏனென்றால் அவர் தன்னுடைய ஜாமீன் மனுவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் சிறையில் இருந்துள்ளார் என்றனர். இடையே குறுக்கிட்டு பேசிய “தேச பிதா காந்தியடிகளை சுட்டுக்கொன்ற வழக்கில் கோட்சேவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகும் ஜாமீன் வழங்கப்படவில்லை” என்று அதிர வைத்தார். தொடர்ந்து மத்திய அரசின் வாதம் பலவீனமான நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது


ALSO READ | Perarivalan Bail: 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் சிறையில் இருந்துள்ளார்... ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் சொன்னது என்ன?