முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் முருகன்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 32ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பேரறிவாளன்(Perarivalan) உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை சுட்டிக்காட்டி பேரறிவாளன் தரப்பில் தன்னை இந்த வழக்கிலிருந்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வர் ராவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆஜராகியிருந்தார்.
வழக்கறிஞர் சங்கரநாராயணன்,“பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்துள்ளார். அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை” என வாதாடினார். இதைத் தொடர்ந்து வாதாடிய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நட்ராஜ், “இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்னவென்றால் அவருடைய கருணை மனு பரிசீலனையிலுள்ளது. ஆகவே அவர் ஜாமீனில் வெளியே இருக்க வேண்டும் என்பது தான். அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கெனவே இவர் இந்த சலுகையை பெற்றுவிட்டார். அதாவது அவருடைய கருணை மனு நீண்ட காலம் கிடப்பில் உள்ளதால் தான் அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது” எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மாநில அரசின் அமைச்சரவை எடுத்த முடிவை ஏன் ஆளுநர் ஏற்கவில்லை. அதை ஏன் ஆளுநர் மத்திய அரசிற்கு அனுப்பினார். அவர் மாநில அரசை தானே நிர்வகிக்கிறார்?” என் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கூடுதல் வழக்கறிஞர் நட்ராஜ், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ன்படி குடியரசுத்தலைவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. அவர் மத்திய அரசின் அதிகாரம் உள்ள சட்டங்களில் மூழமாக கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு குடியரசுத் தலைவர் தான் மன்னிப்பு வழங்க முடியும். பேரறிவாளன் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது” எனக் கூறினார்.
அந்த வாதத்திற்கு நீதிபதி,”அந்த விஷயங்களை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கலாமே? ஏனென்றால் அவர் தன்னுடைய ஜாமீன் மனுவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் சிறையில் இருந்துள்ளார். ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்” எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் வாதாடிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சங்கரநாராயணன்,”இதுவரை இந்தாண்டே பேரறிவாளனுக்கு மூன்று முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. அந்த மூன்று முறையும் அவருடைய நடத்தை நன்றாக தான் இருந்துள்ளது” என வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் திவேதி, “தேச பிதா காந்தியடிகளை சுட்டு கொன்ற வழக்கில் கோட்சேவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் 14ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் 32ஆண்டுகளுக்கு பிறகும் ஜாமீன் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்தார். இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி தன்னுடைய உத்தரவை பிறப்பித்தார். அதில், “இந்த வழக்கில் மனுதாரர் மீது தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரண தண்டனையை 1999ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனையை குறைக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அதில் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இவர் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தமிழ்நாடு அரசின் பரிந்துரையும் ஆளுநருக்கு அனுப்பட்டிருந்தது. எனினும் அந்த மனுவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையே மனுதாரருக்கு மூன்று முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதில் இவருடைய நடத்தை சிறப்பாக இருந்துள்ளது. மேலும் 30ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவருடை வயது, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த நீதிமன்றன் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சிபிஐ அலுவலத்தில் ஆஜராக வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்