ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல் காரர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், இச்சம்பவம் வலி மிகுந்ததாகவும் அவமானகரமானதாகவும் உள்ளதாகவும், பகைமையைத் தூண்டும் சூழலை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உதய்பூர் பகுதி மக்களை அமைதி காக்குமாறும் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தையல்காரரை இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, தான் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்