பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் தொடங்கி சாதாரண நிர்வாகிகள் வரை, பலரும் கருத்துகளை தெரிவித்துவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து கேட்போர் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
"நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்"
மக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார். உதய்பூர் நை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "தலைக்கு மேல் கூரை இல்லாமல் யாரும் பசியோடு தூங்க கூடாது என்பது பிரதமரின் கனவு" என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "தலைக்கு மேல் கூரை இல்லாமல் யாரும் பசியோடு தூங்கக்கூடாது என்பது பிரதமரின் கனவு. நீங்கள் நிறைய குழந்தைகளைப் பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் வீடுகளை கட்டி தருவார். பிறகு என்ன பிரச்னை. 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய அரசு 200 ரூபாய் குறைத்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு 450 ரூபாய்க்கு சிலிண்டர்களை கிடைக்கச் செய்கிறது" என்றார்.
வாய்விட்டு சிரித்த அமைச்சர்கள்:
இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, வீட்டி கட்டி தருவார் என பாபுலால் காரடி கூறும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர். அமைச்சர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்குடி நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பாபுலால் காரடி. உதய்பூரில் இருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ள நீச்லியா தலா கிராமத்தில் பெரிய குடும்பமாக வசித்து வருகிறார் பாபுலால் காரடி. இவருக்கு, இரண்டு மனைவிகளும் நான்கு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.
2023 சட்டமன்றத் தேர்தலில் ஜடோலில் இருந்து நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022இல் ராஜஸ்தான் மாநிலத்தின் சிறந்த எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்தாண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சராக பதவியேற்று கொண்டார்.