Congress - Ayodhaya Ram Mandir  : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22- ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களை சேர்ந்த 25,000 இந்து மதத்தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.


காங்கிரஸ் எடுத்த அதிரடி நிலைப்பாடு:


மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், அதிகாரப்பூர்வ முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. அதன்படி, கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் நாட்டில் லட்சக்கணக்கானோர் ராமரை வழிபடுகிறார்கள்.


"மதம் என்பது தனிப்பட்ட விஷயம்"


மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், அயோத்திகோயில் விவகாரத்தை ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே,  சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலை திறக்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் அரசியல் லாபத்திற்காக கோயில் கும்பாபிஷேக விழாவை விஷ்வ இந்து பரிஷத் கையில் எடுத்துள்ளதாகவும் இந்து மதத் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். 


 கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ள பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "கோயிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டு கொண்டு இருக்க வேண்டுமா?


அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்துவிட்டால் மதகுருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். சனாதன தர்மத்தை மதிப்பதற்கும் மதச்சார்பற்ற தலைவராக பிரதமர் தன்னை சித்தரித்து கொள்ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவையும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்துவிடுகிறார்" என்றார்.