செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு அதை ஓரிருநாள் பிரிவதுகூட பெரும்பாடாகத்தான் இருக்கும். அதுவும் வெளியூர் பயணம் செல்ல நேரும்போது அவற்றை எங்குவிடுவது யாரிடம் பார்க்கச் சொல்வது என நிறைய குழப்பங்களுக்கு ஆளாகிவிடுவார்கள். ஏனெனில் நம் நாட்டில் ரயில், விமானங்களில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. ரயிலில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்லலாம். ஆனால் இதுநாள் வரை அவற்றிற்கு என தனி கம்பார்ட்மென்ட் இருக்கும். அதனுள் சிறு சிறு கூண்டுகள் இருக்கும். அதில் செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு உரிமையாளர்கள் வேறு பெட்டியில் பயணிக்க வேண்டும். இறங்கும் இடம் வந்ததும் அவர்கள் தங்களின் செல்லப்பிராணியை அழைத்துச் செல்லலாம். இது செல்லப் பிராணிகள் வளர்ப்பாளர்களுக்கு அசவுகரியமாகவே இருந்தது. ஆனால் தற்போது ரயில்வே துறையில் பல்வேறு மேம்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட சில ரயில்களில் சில பெட்டிகளில் பயணிகள் அவர்களது செல்லப்பிராணிகளையும் தங்களுடனேயே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 


இந்நிலையில் ரயிலில் தனது செல்ல நாய்க்குட்டியை தன்னுடனேயே சொகுசாக அழைத்துச் சென்ற பெண் பயணி அதை வீடியோவாக வெளியிட அதை ரயில்வே அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ரீட்வீட் செய்துள்ளார்.






முதலில் அந்த வீடியோ thepawfectzazu என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அதில் ஒரு பெண் ரயிலில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்.அவருடன் வந்த சக பயணி அவரை தட்டி எழுப்புவார். கண்விழித்து அவரைப் பார்த்து புன்னகைக்கும் அந்தப் பெண் போர்வையை விலக்க அருகே ஒரு நாய்க்குட்டி எட்டிப் பார்க்கும். அந்த நாய்க்குட்டி அவருடைய செல்லப் பிராணியாம். அதன் பெயர் ஜோர்வாராம். அந்த நாய்க்குட்டியுடனான ரயில் பயணம் பற்றி அப்பெண், ரயில் பயணம் இத்தனை நிம்மதியாக இருக்கும் என்று நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை என்று எழுதியிருக்கிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 27 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.


செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பலரும் ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இனி தங்களின் செல்லப் பிராணிகளையும் விடுமுறையின்போது கூடவே அழைத்துச் செல்ல முடியும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.