இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கரில் மற்றும் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.


அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்துவரும் ராஜஸ்தானிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் முழுவதும் கொரோனா காரணமாக 31 நபர்கள் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால், கடந்த 1-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் 131 நபர்கள் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 242 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரு நாளில் மட்டும் 42 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.




இந்த நிலையில், ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகுஷர்மா இன்று மாநிலத்தின் கொரோனா நிலவரம் குறித்து விளக்குவதற்காக நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் மத்திய அரசு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என்றார். மேலும், கடந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஆனால், இந்த முறை அதிகளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தயாரிக்கும் இடங்கள் மற்றும் ஆக்சிஜன் விநியோகம் முழுவதும் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.




குஜராத் மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சம அளவில் உள்ளது. ஆனால், மத்திய அரசு குஜராத் மாநிலத்திற்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்துள்ளது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்திற்கு வெறும் 124 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை மட்டுமே விநியோகித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். இதுதவிர, ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்கவில்லை என்றால், எப்படி மக்களை காப்பாற்றுவது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் முழுவதும் தினசரி 7 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என்றும், மாநிலத்தில் பற்றாக்குறையாக உள்ள ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளின் தேவையையும் மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரகுஷர்மா கூறினார். குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக அரசு இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.