இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகரான டெல்லியில், மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு இணையாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மேற்கொண்டனர். இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அம்மாநில அரசு பிறப்பித்தது.





கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெல்லியில் சுமார் 24 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் டெல்லியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதன்படி, டெல்லி முழுவதும் இன்று இரவு 10 மணிமுதல் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த ஒரு வார முழு ஊரடங்கு மூலம், மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தமுடியும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.





மேலும், இந்த ஒரு வார காலத்தை முறையாக பயன்படுத்தி, கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த ஒரு வார கால ஊரடங்கில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகள் பணிகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் இறுதிச்சடங்கில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியின் முக்கிய பகுதிகளான கென்னாட் பேலஸ், கான் மார்க்கெட், சரோஜினி நகர், லஜ்பாத் நகர், கரோல்பார்க் ஆகிய பகுதிகளும் முழுமையாக மூடப்படுகிறது. வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், கலையரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




இந்த ஒரு வார கால ஊரடங்கிற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த ஒரு வார ஊரடங்கில், மாநிலம் முழுவதும் அதிகளவிலான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த ஊரடங்கு காலத்தை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைக்க பயன்படுத்திக்கொள்வோம் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மக்களுக்கு எப்போதும் எனது அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.


டெல்லியில் போதியளவிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யூ. படுக்கைகள் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தரவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக கூறியதையடுத்து, நேற்று மத்திய அரசு டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதியை ஏற்படுத்தி தந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.