ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பண்டிட். பசு காவலர் என சொல்லி கொண்டு இவர் பல்வேறு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் பஜ்ரங் தள கட்சி தலைவரான மோனு மனேசர் தலைமையில் இயங்கிய இவர், இஸ்லாமியர்கள் இரண்டு பெயரை கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள லோஹாருவில் வியாழன் அன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரு ஆண்களை கடத்திச் சென்று கொன்றதாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பலியான இருவர், ஜுனைத் மற்றும் நசீர், ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துமீறியதா காவல்துறை?
இந்த வழக்கில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மோனு மற்றும் பண்டிட் ஆகிய நால்வர் தலைமறைவாக உள்ளனர். ஸ்ரீகாந்தை பிடிப்பதற்காக இவரின் வீட்டுக்கு சென்ற காவல்துறை, அவரின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஸ்ரீகாந்தின் மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதாகவும் ஸ்ரீகாந்தின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தாயார் துலாரி தேவி புகார் அளித்துள்ளார். அதில், "எனது மற்ற இரண்டு மகன்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் காவல்துறையின் ஒரு குழு எனது குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. மேலும் எனது கர்ப்பிணி மருமகளின் வயிற்றில் உதைத்தனர். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
ராஜஸ்தான் காவல்துறையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் எங்கள் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஸ்ரீகாந்த் எங்கே என்று கேட்டனர். என் மகன் வீட்டில் இல்லை என்று சொன்னதும் என்னையும், என் மகனின் கர்ப்பிணி மனைவி கமலேஷையும் சரமாரியாக தாக்கினர்.
அவர்கள் எங்களை துன்புறுத்தினர். எனது இரண்டு மகன்களான விஷ்ணு மற்றும் ராகுல் ஆகியோரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர், இன்னும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என கூறியுள்ளார்.
இதையும் படிக்க: Look Comments : தோற்றம் குறித்து கமெண்ட்.. பாலியல் ரீதியான கருத்து என நினைக்கமுடியாது...டெல்லி நீதிமன்றம்
மறுப்பு தெரிவித்த காவல்துறை:
இதுகுறித்து விளக்கம் அளித்த மூத்த காவல்துறை அதிகாரி ஷியாம் சிங், "உண்மையில், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா காவல்துறை பண்டிட்டின் வீட்டிற்குச் சென்றது. ஆனால், அவர்கள் உள்ளே நுழையவே இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் அங்கு இல்லை. அவரது இரண்டு சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அந்தப் பெண் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர்களது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் தான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்" என்றார்.
இந்த சம்பவம் ராஜிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.