சமீபகாலமாக, நீதிமன்றங்கள் சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி நீதிமன்றம் கூறிய கருத்து விவாத பொருளாக மாறியுள்ளது.


ஒருவரின் குறிப்பிட்ட உடை சாராமல் உடல் உறுப்பை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்தோ அல்லது அவரின் நடையை குறித்தோ கருத்து தெரிவிப்பது பாலியல் ரீதியான கருத்துகளாக கருத முடியாது என டெல்லி நீதின்றம் தெரிவித்துள்ளது. 


இளம்பெண் புகார்:


இந்திய தண்டனை சட்டம் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தன்னை மான பங்கம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பெண் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, வேறு இரண்டு நபர்களுக்கு எதிராகவும் இதே தண்டனை சட்ட பிரிவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.


மூன்று பேரும் தன்னைப் பற்றி புண்படுத்தும் கருத்துகளையும் கூறியதாகவும் மேலும் தன்னை மோசமான விதத்தில் நோக்கியதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டினார்.


இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராஜிந்தர் சிங் விசாரித்தார். அப்போது, சொல்லப்பட்ட குற்றங்கள் இந்திய தண்டனை சட்டம் 354A (1)(A) பிரிவின் கீழ் வராது என நீதிபதி தெரிவித்தார்.


நீதிமன்றம் சர்ச்சை கருத்து:


பின்னர், பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளபடி செய்த நீதிமன்றம், "அவர் ஏதோ முணுமுணுப்பதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்து அவர் கேட்கவில்லை" என தெரிவித்தது.


இந்திய தண்டனை சட்டம் பிரிவு 509இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த நீதிமன்றம், "பெண்ணை 
மானபங்கம் செய்யும் விதமாகவோ அல்லது அவரது தனிமையில் இடையூறு செய்யும் நோக்கிலோ எந்த குறிப்பிட்ட வார்த்தைகளும் சொல்லப்படவில்லை" என தெரிவித்தது.


இதுவும் பாலியல் குற்றம்தான்:


முன்னதாக, மும்பை நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.  விருப்பமில்லாத பெண்ணை வா வா என அழைத்தாலும் பாலியல் குற்றம்தான் என தீர்ப்பளித்தது.


ஒரு பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்வது, “வா வா” என்று அழைப்பதும் கூட பாலியல் தொல்லை தான் என மும்பையில் உள்ள திந்தோஷி செசன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட 32 வயது நபருக்கு 6 மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.