நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக கூறியவரை மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் மிரட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோஹ் பகுதியை அமைச்சர் பிரகலாத் பட்டேல் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பகுதியிலிருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்த ஒருவர் அங்கு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து அமைச்சரிடம் கூறியுள்ளார். அந்த நபர் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக ஆக்ரோஷமாக பேசியதை கண்ட பிரகலாத் பட்டேல், “நீ பேசுவதை நிறுத்தவில்லை என்றால் இரண்டு அறை கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்தச் செயல்பாடு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தாமோஹ் பகுதியிலுள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை சிலர் திருடியதாக தகவல் வெளியானது. மேலும் அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வரும் வழியில் திருடப்பட்டத்தாகவும் தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால் நோயாளிகளின் உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் சிறப்பு உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் நாடெங்கிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை அடுத்து மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை குறித்தும் ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான வழிவகை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மாநிலங்களுக்கு அவற்றை விரைந்து விநியோகித்தல் மற்றும் புதிய வகைகளில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த ஆய்வில் அதிக கவனம் செலுத்தச்சொல்லி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். மேலும் எவ்விதத் தடங்கலுமின்றி மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை பூர்த்திசெய்யப்பட மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.