தண்ணீர் பருகியதற்காக சாதியை காரணம் காட்டி ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட மாணவன் விவகாரத்தில் முன்னாள் லோக் சபா சபாநாயகர் கருத்து தெரிவித்து உள்ளார்.


நாட்டை உலுக்கிய சம்பவம்


ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம் சுரானா என்ற கிராமத்தில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்த 9 வயது சிறுவன், பானையில் இருந்த நீரை குடித்ததால் சாதியை காரணம் காட்டி குடிக்கக்கூடாது என்று ஆசிரியர் அடித்த நிலையில், மரணமடைந்த சம்பவம் நாட்டை உலுக்கி உள்ளது. இது குறித்து முன்னாள் லோக் சபா சபாநாயகர் மீரா குமார் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.



என்ன நடந்தது?


இறந்த மாணவர் ஜூலை மாதம் 20 ஆம் தேதி வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பு இடைவெளியில் சிறுவனுக்கு தாகம் எடுத்ததனால், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த நீரை எடுத்து மாணவர் குடித்துள்ளார். அதை கண்ட அந்த பள்ளியின் ஆசிரியர் சைல் சிங், தலித் சமூகத்தை சேர்ந்த நீ, உயர் சமூகத்தினர் குடிக்க வேண்டிய பானையில் உள்ள தண்ணீரை குடிக்கலாமா என்று கூறி, சிறுவனை சரமாரியாக அடித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: தும்பிக்கையை இப்படித்தான் யூஸ் பண்ணனும்.... லைக்ஸ் அள்ளும் யானைக்குட்டி..


மாணவர் பலி


ஆசிரியர் அடித்ததில், மாணவனின் காது பகுதியில் அடி பலமாக விழுந்துள்ளது. இந்நிலையில், காது நரம்பு வெடித்து மாணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த மாணவரின் பெற்றோர்கள் தங்களது மகனை ஜலோர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக உதய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






சாதிய மனப்பான்மை


இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் சைல் சிங் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து காவல் துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, இது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய நாட்டையே உலுக்கிய நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து ஆசிரியருக்கு எதிராகவும், சாதிய மனப்பான்மைக்கு எதிராகவும் கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


மீரா குமார் ட்வீட்


தற்போது இந்த சம்பவம் குறித்து முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "100 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை பாபு ஜக்ஜீவன் ராம் அவர்களை பள்ளியில், சவர்ண இந்துக்களுக்கான குடத்தில் உள்ள தண்ணீரை குடிக்கக்கூடாது என்று தடுத்தார்கள். அப்போது அவர் உயிர் பிழைத்தது ஒரு ஆச்சரியம்தான். இன்று அதே காரணத்திற்காக ஒன்பது வயது தலித் சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், சாதி அமைப்பு நமது மிகப்பெரிய எதிரியாக உள்ளது", என்று மீரா குமார் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.