மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் நுழைய மர்ம நபர் ஒருவர் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா காளிகாட்டில் உள்ள மம்தாவின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய அவர் முயற்சித்திருக்கிறார். 


மம்தாவின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த நபர் யார்?


இந்த சம்பவம் குறித்து விவரித்த கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல், "ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு அருகிலுள்ள பாதையில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.


அந்த நபரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் பல்வேறு ஏஜென்சிகளின் பல அடையாள அட்டைகள், கடத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் அவர் வந்துள்ளார். காவல்துறை, சிறப்பு காவல் படை மற்றும் சிறப்புப் பிரிவினர் அவரை உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்" என்றார்.


டிப் டாப்பாக வந்த மர்ம நபர்:


தொடர்ந்து பேசிய அவர், "இது ஒரு தீவிரமான பிரச்னை. அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிய முயற்சிக்கிறோம். அவர் ஓட்டி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வருகிறார்" என்றார்.


பிடிஐ வெளியிட்ட செய்தியின்படி, ஹரிஷ் சட்டர்ஜி தெருவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் வந்துள்ளார். அப்போது, அந்த நபர் கருப்பு கோட் மற்றும் டை அணிந்திருந்தார். அந்த சமயத்தில், மம்தா பானர்ஜி, அவரின் வீட்டில்தான் இருந்திருக்கிறார்.


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மம்தா:


மத்திய கொல்கத்தாவில் 'தியாகிகள் தின' பேரணியில் கலந்து கொள்வதற்காக திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா, தனது இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், முக்கிய பங்காற்றி வருபவர் மம்தா. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியவரே மம்தாதான் எனக் கூறப்படுகிறது. இறுதியாக, அதே பெயர் வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


மேற்குவங்கத்தில் 31 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் மம்தா. கடந்த 2011ஆம் ஆண்டு, 2016ஆம் ஆண்டு, 2021ஆம் ஆண்டு என தொடர்ந்து மூன்று முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.