ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் கோயிலுக்கு அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கோயிலில் இருந்த சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இரு பிரிவு மக்களுக்கிடையே அங்கு மோதல் வெடித்துள்ளது. அதில், ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கமானில் உள்ள கார்முகா கிராமத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் கோயில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது கோயிலில் இருந்த சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹிம்மத் சிங் கூறுகையில், "இதில் இருதரப்பு மக்களும் ஈடுபட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜமீல், ஃபக்ருதீன் மற்றும் அம்சாத் என அடையாளம் காணப்பட்ட மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 151 (ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முற்றிலும் தவறான புரிதல் மக்களிடையே நிலவுகிறது.
குழந்தைகள் விளையாடும் போது சிலை சேதமடைந்தது. ஆனால் மக்கள் அதை பெரியவர்கள் செய்ததாக நினைக்கின்றனர். காயமடைந்தவர்களில் ராம் பரோசி, மனிஷ் சைனி, ராம் சரண் சைனி, கீதா தேவி, ரோஹ்தாஷ் சைனி மற்றும் ரேகா தேவி ஆகியோர் அடங்குவர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
கலவரத்தின்போது காயம் ஏற்பட்ட நபர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "போலீசார் முன்னிலையில், மற்ற மதத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் எங்களைத் தாக்கினர். அவர்களின் பிள்ளைகள் எங்களின் சிலையை சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கவே நாங்கள் அவர்களை அணுகினோம்" என்றார்.
சமீப காலமாகவே, பெரும்பான்மை சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகத்திற்கு இடையே தொடர் பதற்றம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் 2014ஆம் ஆண்டை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, பாஜக நிர்வாகி நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
இது, இந்தியா மட்டும் இன்றி, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், வெறுப்பை தூண்டும் பேச்சுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.