தற்போதுள்ள சூழலில், வெறுப்பு பேச்சு என்பது முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு, அவர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் அச்ச உணர்வு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ராஜஸ்தான் பாஜக பிரமுகர் கியான் தேவ் அஹுஜா, பசுவதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள் என கூட்டத்தில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. "நாங்கள் இதுவரை ஐந்து பேரைக் கொன்றோம். லாலாவண்டி, பெஹ்ரோர் ஆகிய பகுதிகள் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன" என ரக்பர் கான் மற்றும் பெஹ்லு கான் கொலை செய்யப்பட்டதை நேரடியாக சுட்டி காட்டி பேசியுள்ளார்.
இந்த இரண்டு கொலைகளில் ஒன்று 2017ஆம் ஆண்டும் மற்றொன்று 2018ஆம் ஆண்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது கியான் தேவ் அஹுஜா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பகுதியான ராம்கரில் நடந்தது. அவர் கூறியுள்ள மற்ற மூன்று கொலைகள் எங்கு நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
இந்த வார தொடக்கத்தில், அவர் இப்படி பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதில், "கொல்ல செய்ய முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். அவர்களை விடுதலை செய்து ஜாமீன் பெறுவோம்" என கியான் தேவ் அஹுஜா கூறியுள்ளார்.
பெஹ்லு கான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் 2019 இல் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மாநிலத்தின் காங்கிரஸ் அரசின் மேல்முறையீடு இப்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ரக்பர் கான் கொலை வழக்கில், உள்ளூர் நீதிமன்றம் இன்னும் விசாரணை நடத்தி வருகிறது.
சனிக்கிழமையன்று இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A பிரிவின் கீழ், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொலையாளிகள் "தேசபக்தர்கள்" மற்றும் "சத்ரபதி சிவாஜி மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோரின் உண்மையான வழித்தோன்றல்கள் என்று கூறும் அளவுக்கு அவர் இதற்கு முன்பும் இதே போன்ற கருத்துக்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ள பாஜகவின் அல்வார் தெற்குத் தலைவர் சஞ்சய் சிங் நருகா, “கட்சிக்கு இந்த எண்ணம் இல்லை. இது அவரது சொந்த கருத்து" என்றார்.
ஆனால், தனது கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள அஹுஜா, "பசுக் கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபடும் எவரும் விடுவிக்கப்பட மாட்டார்கள்" என்றார். மேலும், பசுக்களைக் கடத்திய ஐந்து முஸ்லிம்கள் எங்கள் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்டார்கள் என்றுதான் சொன்னேன் என பல்டி அடித்துள்ளார்.