ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் இல்லாகுயாய் தேஹாட்டி வங்கியில் பணிப்புரிந்து வந்துள்ளார். இன்று காலை அவர் வழக்கம் போல் பணிக்கு செல்லும் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 


இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சார்பில் ட்விட்டர் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், “தீவிரவாதிகள் இன்று வங்கி ஊழியர் ஒருவரை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்துள்ளனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கார்க் பகுதியைச் சேர்ந்தவர். அந்த இடம் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளது. 


 






இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமாரை ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்துள்ளது கண்டனத்திற்குரியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அங்கு அமைதியான சூழலை உருவாக்க தவறியுள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியை ஒருவர் மரணம் அடைந்திருந்தார். அந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது மேலும் ஒரு நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண