ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர் கேசவன் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார்.






இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள குறிப்பில், “ இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அவரை தேசிய செய்தி தொடர்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உத்தரவிட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்திய நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலாச்சாரி. இவரை ராஜாஜி என அழைப்பார்கள். இவரது கொள்ளுப் பேரன் சி.ஆர் கேசவன். காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கடந்த ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.


கடந்த 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் என்ற பதவியை வகித்த அனுபவம் இவருக்கு உள்ளது. இவற்றை தவிர பிரச்சார பாரதியின் உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்து வந்தார் சி.ஆர். கேசவன். 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத விதம் பாஜகவில் இணைந்தார். இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அக்கட்சியின் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.