Electoral Bonds: தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார்.
”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” - பிரபாகர்:
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட இன்னும் அதிக வேகம் பெறும். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதோடு, இது தான் உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஆகும்.
இந்தப் பிரச்சினையால், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் வாக்காளர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படும். தேர்தல் பத்திர ஊழல் பகிரங்கமான பிறகு, இப்போது சண்டை இரண்டு கூட்டணிகளுக்கு இடையே இல்லை. பாஜக மற்றும் இந்திய மக்களுக்கு இடைப்பட்டதாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் ஏற்கனவே பாஜக மற்றும் பாஜக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டது” என பிரபாகர் தெரிவித்துள்ளார். மனைவி நிர்மலா சீதாராமன் நிதியமச்சராக அங்கம் வகிக்கும், அரசின் திட்டத்தையே பிரபாகர் விமர்சித்து இருப்பது பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம்:
தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் தனி நபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம் என, மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, இந்த திட்டம் அமலுக்கு வந்தது முதல் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விவரங்களை வெளியிட வேண்டும் என, தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், உடனடியாக தகவல்களை வெளியிட வைத்தது.
பெரும்பயன் யாருக்கு?
இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளின்படி, ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை 6,986.5 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 1,397 கோடியும், காங்கிரஸ் 1,334 கோடியும், தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) 1,322 கோடியையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு, கார்ப்ரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி வசூலித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதோடு, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதியை கொண்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் சதிகளை பாஜக நிகழ்த்துவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.