உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்து எதிரெதிர் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.


மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஒருபுறமும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மறுபுறமும் உள்ளது.


ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா?


மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கைக்கோர்த்து சிவசேனாவை இரண்டாக உடைத்தார்.


உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்து, பாஜகவின் ஆதரவோடு முதலமைச்சரானார். தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டேதான் உண்மையான சிவசேனா என அங்கீகரித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்திருந்தாலும், உத்தவ் தாக்கரவுக்குதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளிலும் அதுவே எதிரொலித்துள்ளது. குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்ட நிலையிலும், மகாராஷ்டிராவில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.


பாஜக போடும் மெகா பிளான்:


இதனால், கூட்டணியை பலப்படுத்த பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை கூட்டணிக்கு உள்ளே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஒரு அதிரடி திருப்பம் நடக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை சிவசேனாவுடன் இணைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சிவசேனாவின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரேவின் தம்பி மகன்தான் ராஜ் தாக்கரே ஆவார்.


பால் தாக்கரே உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனிகட்சி தொடங்கி நடத்தி வருகிறார். பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து, அவரின் மகன் உத்தவ் தாக்கரேவின் கட்டுப்பாட்டுக்கு சிவசேனா வந்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டேவுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தால் தற்போது ராஜ் தாக்கரே மூலம் உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைக்க பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு:


சமீபத்தில், டெல்லியில் நடந்த கூட்டத்தில், ராஜ் தாக்கரேவிடம் இதுகுறித்து பாஜக தலைமை பேசியுள்ளதாகவும் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா - சிவசேனா கட்சி இணைப்புக்கு பிறகு சிவசேனா தலைவர் பதவியை ராஜ் தாக்கரேவுக்கு அளிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


பாஜகவின் இந்த திட்டத்திற்கு ஏக்நாத் ஷிண்டே சம்மதம் தெரிவிக்காமல் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டத்தால் ஏக்நாத் ஷிண்டேவின் முதலமைச்சர் பதவி பறிக்கப்படாது என பாஜக தரப்பில் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 


மகாராஷ்டிராவில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்ற பாஜக கூட்டணி முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் பாஜக கூட்டணி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.