மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள கல்யாண் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து சிறுத்தை வெளியேறுவது போன்ற வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியுள்ளது.


வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "முதல் தளத்தில் சிறுத்தையைப் பார்த்தேன். மக்கள் உதவி கேட்டு அலறினர். எச்சரிக்கையை மீறி கட்டிடத்திற்குள் சென்ற ஒருவர் சிறுத்தையால் தாக்கப்பட்டார்.


எங்களில் சிலர் கையில் குச்சிகளுடன் அதை பயமுறுத்தினோம்" என்றார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், சிறுத்தை தாக்கிய நபர் தலை, கைகளில் கட்டுடன் செல்வது பதிவாகியுள்ளது.


இதேபோல, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நேற்று சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு அது அமைதிப்படுத்தப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சமீபத்தில், மும்பை அரே காலனி பகுதியில் வனத்துறையினர் ஒரு ஆண் சிறுத்தையை பிடித்தனர். சம்பவம் நடைபெற்ற அதே வாரத்தில் பிடிபடும் இரண்டாவது சிறுத்தை இதுவாகும்.


அரே காலனியில் யூனிட் 15 பகுதியில் அதிகாலை சிறுத்தை சிக்கியது. அரே காலனி என்பது மும்பை கோரேகான் பகுதியின் மேற்கு புறநகரில் அமைந்துள்ளது.


பிடிபட்ட சிறுத்தை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள மீட்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, யூனிட் 15 பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை அந்த சிறுத்தை கொன்றது. பின்னர், யூனிட் 17 பகுதியில் ஒரு சிறுத்தை சிக்கியது.


இந்த சிறுத்தை தான் அந்த ஒன்றரை வயது குழந்தையை கொன்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம் என வனத் துறை அதிகாரிகள் கூறினர்.


அந்த நிகழ்வுக்குப் பின்னர் சிறுத்தையை பிடிக்க மேலும் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டது. அதில், 3 சிறுத்தைகள் சிக்கின. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 30 கேமராக்கள் பொருத்தப்பட்டன. அரே காலனி பகுதியில் மனித மிருக மோதல் பிரச்சினையை சமாளிக்க 30 விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வ குழுக்களைச் சேர்ந்தவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். 


இருப்பினும் அடுத்தடுத்து சிறுத்தை சிக்குவது அரே காலனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்பட முக்கிய காரணம் விலங்குகள் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள்.


மனித - வனவிலங்கு மோதல்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் வன விலங்கு வசிப்பிடத்தில் நிகழும் ஆக்கிரமிப்பு, வாழ்விட சீரழிவு போன்றவற்றால் ஏற்படுகிறது.