ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.


எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


சீறிப்பாய தயாராகும் புல்லட் ரயில்:


இதை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், புல்லட் ரயில் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். புல்லட் ரயிலின் முதல் ரயில் பாதைக்கான கட்டுமான பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்திய ரயில்வே சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்த அவர், ரயில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் 
கவாச் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் என்றார்.


ரயில்வே அமைச்சர் தந்த புது அப்டேட்:


கஜ்ராஜ் தொழில்நுட்பம் குறித்தும் பல்வேறு தகவல்களை ரயில்வே அமைச்சர் பகிர்ந்து கொண்டார். யானைகள் மற்றும் ரயில்களுக்கு இடையே மோதல்களை தடுக்க கஜ்ராஜ் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சிறப்பாக இணைக்க அதிக ரயில் தடங்களை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறிய அவர், "கொரோனாவுக்கு முன்பிருந்த காலத்தில் இந்தியாவில் 1,768 மெயில்/எக்ஸ்பிரஸ் சேவைகள் இயக்கப்பட்டன. இப்போது 2,124 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5,626 புறநகர் சேவைகளில் இருந்து 5,774 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை 2,792ல் இருந்து 2,856 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 2022-23 ஆண்டில் 640 கோடி பயணிகள் இந்திய ரயில்வேவை பயன்படுத்தியுள்ளனர். நடப்பு 2023-24 ஆண்டுக்கு 750 பயணிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


கடந்த வாரம், புல்லட் ரயில் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை ரயில்வே அமைச்சர் பகிர்ந்திருந்தார். புல்லட் ரயில் செல்லும் வகையில் 100 கிமீ தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணிகளும் 230 கிமீ தூரத்துக்கு தூண் அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாலத்தின் மீதுதான் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.