கேரள வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் சூரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்த இந்திய மாணவர் அமைப்பினர், உள்ளே இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.  இந்நிலையில் மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.


முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ராகுல் காந்திக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அலுவலக பணியாளர் ஒருவர் இதில் படுகாயம் அடைந்ததாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.


 






இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த 100 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு காவல்துறையினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர். 


பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள், வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்கா உள்ளிட்டவைக்கு அருகே சில கிமீ தூரத்தில் அமைந்துள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக பராமரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனால் கோபமடைந்த மாணவர் அமைப்பினர், இதுகுறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆனால், கடந்த ஜூன் 23ஆம் தேதியே, பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.


 






"மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திறனைத் தடுக்கிறது" என்றும் ராகுல் காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.