காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமராக வருவார் என லிங்காயத் சமூகத்தின் கூட்டத்தில் மத தலைவர் ஒருவர் பேசியிருப்பதும் அப்போது, மத பிரிவின் மற்றொரு தலைவர் குறுக்கிட்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 






சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருகராஜேந்திர மடத்தில் லிங்காயத் சமூக தலைவர்களுடனான ஒரு சந்திப்பில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, அச்சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான ஹாவேரி ஹோசமுட் சுவாமிகள் ராகுல் காந்தியின் பாட்டி மற்றும் தந்தையை குறிப்பிட்டு பேசினார். "இந்திரா காந்தி பிரதமர், ராஜீவ் காந்தி பிரதமர், இப்போது ராகுல் காந்தி லிங்காயத் மதப்பிரிவில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளார். அவரும் பிரதமராக வருவார்" என்றார்.


அப்போது, லிங்காயத் பிரிவின் தலைவர் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணரு குறுக்கிட்டு, "தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்... இது அதற்கான மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார். முன்னதாக, ராகுல் காந்தியை சம்பிரதாயமாக லிங்காயத் பிரிவுக்குள் அவர் வரவேற்றிருந்தார்.


கர்நாடக மக்கள் தொகையில் சுமார் 17 சதவீதமாக இருக்கும் லிங்காயத்துகள் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். தேர்தல் நடைபெறும் கர்நாடகாவிற்கு ராகுல் காந்தி சென்றிருப்பதால், இச்சமூக மக்களின் வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என அக்கட்சி நம்புகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது.


பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது. 


2013 முதல் 2018 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2018 தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் எச்டி குமாரசாமி தலைமையிலான அந்த கூட்டணி அரசிலிருந்து பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய, ஒரு வருடத்தில் அந்த அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது.


பாஜக முதலில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிஎஸ் எடியூரப்பாவை முதலமைச்சராக்கியது. கடந்த ஆண்டு அவருக்கு பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை நியமித்தது.


காங்கிரஸ் கட்சியில் உள் கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளது. கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இருவரும் போட்டியிடுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண