IELTS ஆங்கில புலமைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவித்ததையடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடாவில் இருந்து படகில் அமெரிக்காவுக்குள் சென்றபோது இவர்கள் பிடிபட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். அமெரிக்க அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெஹ்சானா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் பவேஷ் ரத்தோட், "கனடா எல்லைக்கு அருகே, 19 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆறு பேர், அமெரிக்காவின் அக்வேசாஸ்னேவில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து பிடிபட்டனர்.
இவர்கள் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தவறிவிட்டனர். நீதிமன்றம் இந்தி மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாட வேண்டியிருந்தது. இந்த மாணவர்கள் ஐஇஎல்டிஎஸ்-ல் 6.5 முதல் 7 மதிப்பெண்கள் எடுத்ததால் நீதிமன்றம் குழப்பமடைந்துள்ளது" என்றார்.
சர்வதேச ஆங்கில மொழி சோதனை தேர்வு (IELTS) என்பது வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு வைக்கப்படும் ஆங்கில புலமைக்கான ஒரு நிலையான தேர்வாகும். பல நாடுகளில் உள்ள நல்ல கல்லூரிகளில் சேர்வதற்கு, இதில் நல்ல மதிப்பெண் எடுப்பது அவசியம்.
இந்த செய்தியை கேட்ட இணைய வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆறு இளைஞர்களும் செப்டம்பர் 25, 2021 அன்று தெற்கு குஜராத்தின் நவ்சாரி நகரில் தேர்வெழுதினர். அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபடுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மாணவர் விசாவில் கனடாவுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளது.
தேர்வு நடைபெற்ற அறையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ரத்தோட் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். தேர்வை நடத்த அதிகாரம் பெற்ற ஏஜென்சியின் உரிமையாளர்கள், விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்