மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினார்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி: கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் அங்கு கலவரங்களும் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இனக்கலவரம் வெடித்த பிறகு, மூன்றாவது முறையாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார. கலவரம் வெடித்த சில வாரங்களிலேயே அவர் சென்றிருந்தார்.
இதையடுத்து, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக சென்றார். மணிப்பூரில் சென்று இறங்கியதுமே, ஜிரிபாம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார்.
ராகுல் காந்தியின் பயணம் குறித்து பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, "ஜிரிபாமில் உள்ள மக்கள், தாங்களுக்கு நேர்ந்தவற்றை ராகுல் காந்தியிடன் கூறினார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்டறிந்தார்.
பிரதமரோ, முதலமைச்சரோ தங்களைப் பார்க்க வரவில்லை என்று ஒரு சிறுமி ராகுல் காந்தியிடம் கூறினார். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவரை வலியுறுத்தினார்கள். ஜிரிபாமில் ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் அவருடன் அழுதபடியே பேசினர்.
ஜிரிபாமில் இருந்து, அசாமில் உள்ள சில்சார் வழியாக இம்பால் விமான நிலையத்திற்கு வந்து, சாலை வழியாக சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமை வந்தடைந்தார்.
மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் களத்தில் நிலவும் நிலைமையை ஆராய்வதற்காகவும் ராகுல் காந்தி மணிப்பூர் வந்துள்ளார். சமீபத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை அவரது வருகை பிரதிபலிக்கிறது" என்றார்.
இதையடுத்து, இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரத்தால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.