சத்தியமே என் கடவுள் அதை அடைய அகிம்சையே என் வழி என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி அவர் கூறியதற்காக 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த பிறகு மகாத்மா காந்தியின் மேற்கோளை ராகுல் காந்தி மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
"எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே எனது கடவுள், அகிம்சை அதைப் பெறுவதற்கான வழிமுறை" என்று ராகுல் காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் எப்படி வந்தது?” என்று ராகுல் காந்தி பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி அந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
தீர்ப்பின் போது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“விலைபோன இயந்திரங்கள் அனைத்தும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயல்கின்றன. என் சகோதரன் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்பட மாட்டான். உண்மையைப் பேசி வாழ்ந்தவர், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை அவர் தொடர்ந்து எழுப்புவார். உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவருடன் உள்ளது" என்று பிரியங்கா காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
"எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒடுக்க சதி நடக்கிறது. பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சதி நடக்கிறது. ராகுல் காந்தியுடன் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால் அவரை அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல. நான் நீதிமன்றத்தினை மதிக்கிறேன். ஆனால் தீர்ப்பை ஏற்கவில்லை" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கே, தண்டனையை எதிர்த்துப் போராட சட்டப்பூர்வ வழியை கட்சி எடுக்கும் என்றார்.
"ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், இதற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்," என்று கார்கே கூறியுள்ளார்.