மாநில பா.ஜ.க தலைவர்களை மாற்றம் செய்து புதிய தலைவர்களை நியமித்துள்ளார் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. அதன்படி ராஜஸ்தான், ஒடிசா, பிகார், டெல்லி ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவின் டெல்லி செயல் தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவாவை டெல்லி மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ராஜஸ்தான் மாநில தலைவராக சி.பி. ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் ராஜஸ்தானில் சதீஸ் பூனியா மாநிலத்தலைவராக இருந்தார்.  ஒடிசா மாநில தலைவராக இருந்த சமீர் மொஹந்திக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் மன்மோகன் சமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, சாம்ராட் சவுத்ரி நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்த நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அதேபோல் பீகாரில்  முதலமைச்சர் நிதீஷ் குமார், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி, ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பீஜூ பட்நாயக் ஆட்சி நடைபெற்று வருகிறது.


ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் ஒடிசாவில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பா.ஜ.க இந்த முறை அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென அனைத்து நடவடிக்கைளும் அக்கட்சி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் நேற்றைய தினம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். அவர் டெல்லி பயணத்தில் பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களை சந்தித்தாக கூறப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பா.ஜ.க இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பா.ஜ.க ஐ.டி விங் பிரிவிலிருந்து பலரும் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி தொடர்ந்தால் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதாக வெளியான தகவல், கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்படுத்தியுள்ளது.


அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடும் அதிருப்தியில் தலைமை இருப்பதாக தெரியவந்துள்ளது. இது சம்மதமாக பேச்சுவார்த்தை நடத்த அவர் டெல்லி சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூட்டணி தொடர விருப்பமில்லை என தெரிவிக்கும் நிலையில, மத்திய பா.ஜ.க வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் கூட்டணி தொடர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.