கடந்த 2014ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 10 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது கர்நாடக தேர்தல். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதி கொண்டதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. இதில், காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பாஜகவை வீழ்த்த வியூகம்:
பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. எனவே, இந்தாண்டின் இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதற்கான களத்தை தயார் செய்ய தொடங்கின எதிர்க்கட்சிகள். அதன் முதல் முயற்சியாக, பிகாரில் மெகா மாநாட்டை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் சந்திக்க முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவிருந்தனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் விதமாக, இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டம் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் லலன் சிங், "எதிர்கட்சிகளின் கூட்டம் வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடக்கிறது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்" என்றார்.