இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு பெண் ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தற்போதை தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மல்யுத்த வீரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை:


மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து, கடந்த 5 நாள்களில் இரண்டாவது முறையாக மல்யுத்த வீரர்களிடம் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேற்று இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.


அதை ஏற்று, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் வீட்டில் மல்யுத்த வீரர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது, 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரி வருகின்றனர்.


மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் இதுதான்:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் சம்மேளனத்தில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா நாளில் மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக அவர்கள் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிரிஜ் பூஷன் சிங்கைக் கைது செய்ய வேண்டும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முக்கிய முகமாக கருதப்படும் வினேஷ் போகட், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.


போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஹரியானாவில் நடத்தப்பட்ட மகாபஞ்சாயத்தில் வினேஷ் போகட் கலந்து கொண்டதால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, மல்யுத்த வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கடந்த மே 28ஆம் தேதி, காவல்துறையின் அனுமதியை மீறி, நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயற்சி செய்ததையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டனர்.