பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட பல்வேறு சரமாரி கேள்விகளை மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். 


கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன தொடர்பு?, அமெரிக்க முதலீட்டு குழுவான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குழுவின்  அறிக்கையின் படி, கௌதம் அதானி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டதை அடுத்து அதானியின் நிறுவனங்கள் சுமார் 120 பில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளது உள்ளிட்ட கேள்விகளுடன்  ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி, 07) மக்கள்வையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


அதில், கௌதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்திற்கு பல்வேறு துறைகளில் பிரதமர் மோடி உதவியதாக ராகுல் காந்தி  குற்றம் சாட்டினார்.  


” எனது யாத்திரையின் போது அதானி எப்படி பல துறைகளில் வெற்றி பெற்றார், பிரதமருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று மக்கள் என்னிடம் கேட்டனர்" என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறினார். 


”2014 மற்றும் 2022 க்கு இடையில் அதானியின் நிகர மதிப்பு 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக எப்படி அதிகரித்தது என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள்” என ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். 


2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது தொழிலதிபர் கௌதம் அதானி  600 வது இடத்தில் இருந்தார், தற்போது அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார், இது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.


ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருக்கும் போது, "காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள், ஆதாரம் கொடுங்கள்" என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.