மேற்குவங்கம் மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 


நாட்டை உலுக்கிய பயிற்சி மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கு: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சஞ்சய் ராய். காவல்துறைக்கு தன்னார்வு உதவியாளராக (civic volunteer) இருந்து வந்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.


சஞ்சய் ராயுக்கு 4 முறை திருமணம் நடந்துள்ளதாகவும் அவரின் மோசமான நடத்தை காரணமாக 3 மனைவிகள் விட்டு சென்றதகாகவும் கூறப்படுகிறது. கடந்தாண்டு, நான்காவது மனைவி புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும்  மது குடித்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவது அவரது வழக்கமாக இருந்ததாகவும் சஞ்சய் ராயின் அண்டை வீட்டார் குற்றம்சாட்டுகின்றனர்.


ஆனால், இவற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சஞ்சய் ராயின் மனைவி மாலதி ராய், "என் மகன் அப்பாவி. போலிஸாரின் அழுத்தத்தால் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார். 


குற்றவாளி பற்றி பகீர் தகவல்கள்: ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் கொல்லப்பட்ட பெண், படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர், நேற்றுமுன்தினம் (வியாழன்) இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.


பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.


"அவரது கண்கள் மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. முகத்தில் காயம் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளிலும் ரத்தம் கொட்டியது. அவரது வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளில் காயங்கள் உள்ளன" என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.


இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி, தேசிய மருத்துவக் கல்லூரி, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.