அவதூறு வழக்கு ஒன்றில் ஏற்கனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகல் காந்திக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.


பாஜக புகார்:


கடந்த மே 9ஆம் தேதி, கர்நாடக பாஜக தலைவர் கேசவபிரசாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "மே 5ஆம் தேதி, காங்கிரஸ் சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டதாகவும் அதில், அரசு ஒப்பந்தங்களில் பாஜக அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகவும், முந்தைய நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.


இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. பாரபட்சமானது. அவதூறு பரப்பும் வகையில் தொடரப்பட்டுள்ளது. இந்த பொய்யான பிரச்சாரத்தின் காரணமாகவே நடைபெற்ற முடிந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது " என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் பதில் அளிக்க ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.


கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், ஊழலை மையப்படுத்தியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அமைந்தது. பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் மேற்கோள்ளப்படும் அரசு ஒப்பந்தங்களில் அதிகாரிகள் 40 சதவிகிதம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முக்கிய விவகாரமாக கையில் எடுத்த காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.


ராகுல் காந்தியை விடாது துரத்தும் அவதூறு வழக்கு:


குறிப்பாக, அப்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய காங்கிரஸ், "PayCM" என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. இது மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.


இதன் விளைவாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரிய வெற்றியை பதிவு செய்தது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் காரணமாக துவண்டு கிடந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு, கர்நாடக வெற்றி பெரிய உற்சாகத்தை தந்தது. அதுமட்டும் இன்றி, தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமாக மாறியது.


இதே கர்நாடகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துதான், அவர் நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்ய காரணமாக அமைந்தது.