காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார்.  


தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் இந்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணத்தின்போது, மத்திய பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


"சீன ராணுவத்தால் கூட இந்தியாவுக்கு செய்ய முடியாததை, பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி கொளை மூலம் செய்து முடித்துள்ளனர்" என கூறியுள்ளார்.


ராஜ்வாடா அரண்மனையில் பேசிய ராகுல் காந்தி, "இந்த இரண்டு முடிவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. சிறு மற்றும் குறு தொழில் வணிகர்கள், விவசாயிகளின் பண புழக்கம் தடைபட்டது. இந்த நாட்டின் அதிக வேலைவாய்ப்புகளை இந்த இரண்டு துறைகள்தான் உருவாக்குகிறது.


இதனால் நாட்டில் வேலைவாய்ப்புகள் முடங்கின. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் புத்துயிர் பெறாத வரை, இந்தியாவின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது.


இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள், இன்ஜினியரிங் மற்றும் பிற தொழில்முறை பட்டம் பெற்றவர்கள் வண்டிகளை ஓட்டுகிறார்கள் அல்லது உணவு வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.


ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணம் வேகமாக கை மாறி பாஜகவை சென்றடைகிறது, பின்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க பேராசை கொண்ட எம்எல்ஏக்களின் பாக்கெட்டுகளில் அதை போடுகிறது.


மத்தியப் பிரதேசத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (2018இல்) அரசை பேராசை பிடித்த எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததன் மூலம் கவிழ்த்தனர். இது ஊழல் இல்லை என்றால், ஊழல் என்று எதைச் சொல்வீர்கள்?


வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் துயரம், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி போன்ற பொதுப் பிரச்னைகளைப் பற்றி செய்தி வெளியிடுவதற்குப் பதிலாக, ஐஸ்வர்யா ராய் என்ன உடை அணிந்திருக்கிறார், ஷாருக்கான் என்ன சொல்கிறார், பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அடிக்கும் பவுண்டரிகள் போன்றவற்றைப் பற்றி செய்தி வெளியிட வேண்டிய கட்டாயத்தில் ஊடகவியலாளர்கள் உள்ளனர். 


ஆனால், பத்திரிகையாளர்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஏனெனில், அவர்கள் பின்னால் இருந்து ஆட்சி செய்பவர்களின் அழுத்தத்தின் கீழ் அவர்கள் இதனை செய்கிறார்கள். 


டிவி ரிமோட்டை எடுத்து சேனல்களை தேடுங்கள், நீங்கள் பார்ப்பது நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், ஐஸ்வர்யா ராய் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோரை மட்டுமே. எங்கள் விவசாயிகளின் கவலையான முகங்களையும் கொப்புளங்கள் நிறைந்த கைகளையும் நீங்கள் பார்க்கவே முடியாது" என்றார்.