ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ராஜ்பாத்தில் முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மெய் சிலிர்க்க வைக்கும். இதன் சிறப்பு விருந்தினராக உலக தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்.


அந்த வகையில், 2023ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி கலந்து கொள்கிறார்.


இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை இந்தியா அவருக்கு விடுத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 


2023இல் இந்தியாவின் தலைமையில் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஒன்பது விருந்தினர் நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். வரும் டிசம்பர் 1ஆம் தேதி, தற்போதைய ஜி-20 குழுவின் தலைவராக உள்ள இந்தோனேசியாவிடம் இருந்து ஜி - 20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.






குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் கலந்து கொள்ளவிருப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகரீகம், மக்களுடன் மக்களுக்கு இருக்கும் ஆழமான உறவுகளின் அடிப்படையில் அன்பான நட்புறவை இந்தியாவும் எகிப்தும் பேணுகிறது. இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றன. 


2022-23இல் ஜி - 20 குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்கும் சூழலில் சிறப்பு விருந்தினராக எகிப்து அழைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கெய்ரோவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தபோது அல் சிசிக்கு முறையான அழைப்பை விடுத்ததாக கூறப்படுகிறது.


கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்கு இந்தியா எந்த வெளிநாட்டு பிரமுகர்களையும் தலைமை விருந்தினராக அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன், பிரேசிலின் அப்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2020ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருந்தார்.


ஜெய்சங்கரின் சமீபத்திய எகிப்து பயணத்திற்குப் பிறகு தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது பல புகழ்பெற்ற இந்திய நிறுவனங்கள் அரபு நாட்டில் முதலீடு செய்ய வருவதை எடுத்துரைத்து பேசியிருந்தார்.