ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.


ராகுல் காந்தி தரப்பு வாதம்:


ராகுல் காந்தி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கற்ஞர் அபிஷேக் மனு சிங்வி “கர்நாடாகவில் 2019ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியபோது நீரவ் மோடி,லலித் மோடி பெயரை எல்லாம் அவர் பயன்படுத்தி இருந்தார். அப்படி, அந்த உரையில் குறிப்பிடப்பட்ட யாருமே தனக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மோடி என்ற சமூகத்தில் பல்வேறு  பிரிவினர் உள்ளனர். அதில், 13 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால், தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருப்பவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் தான். பாஜகவினரால் தொடரப்பட்ட வழக்குகள் எதிலும் நான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில்லை. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேச ராகுல் காந்திக்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு எதிராக பதியப்பட்டது கடத்தல், கொலை போன்ற கடுமையான வழக்குகள் அல்ல. ஜாமின் பெறக்கூடிய ஒரு சாதாரண அவதூறு வழக்கு தான். ஆனால், அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், 8 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாத சூழல் உருவாகிவிடும். இவ்வளவு பெரிய தண்டனை இந்த வழக்கிற்கு தேவையற்றது. எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. 


எதிர்தரப்பு வாதம்:


மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினார். தொடர்ந்து அவர்கள் வாதிட்டபோது, ”பிரதமர் மோடியை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் மோடி சமூகத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்தி பேசியுள்ளார்” என விளக்கமளித்தனர்.


நீதிபதிகள் கேள்வி:


”ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏன்? தனிநபருக்கான தண்டனை என்பதாக மட்டுமில்லாமல் தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது.  அதிகபட்ச தண்டனை தந்தது ஏன் என்பது பற்றி தீர்ப்பளித்த நீதிபதி எந்த காரணத்தையும் கூறவில்லை.  தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவுக்கு இந்த அவதூறு வழக்கு பொருத்தமான காரணமா?  ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள்  விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


வழக்கு விவரம்:


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.