சென்னையில் தொடர் மழை கவலைகொள்ளச் செய்வதாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்வீட்டில் ’சென்னை மழை கவலைகொள்ளச் செய்வதாக உள்ளது.அங்கே உள்ள சகோதர சகோதரிகள் அனைத்து விதிகளையும் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.பேரிடர் கால மீட்புப்பணியில் காங்கிரஸ் ஊழியர்களும் இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை வைக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 






இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக அறிவித்த சென்னை வானிலை மையம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது.



காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவரம் குறித்து சற்றுமுன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் 16 கிலோ மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதே நிலையில் நகர்ந்து செல்லும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 
 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும்” என்றார்.



சென்னைக்கான ‘ரெட் அலர்ட்’ விலகியது



சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.


 


முன்னதாக, ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிலத்திற்குள் நுழைந்து பின்னர் வலுவிழந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளது. இன்றைய மழைப்பொழிவு ஆந்திராவில் அதிகமாக இருக்கும்’ என்று இந்திய வானிலை மையம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.