அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 17 முதல் ஜூன் 20 வரையிலான நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார். தனது தாய் சோனியா காந்தி உடல்நிலையை காரணம் காட்டி அவர் விலக்கு கோரியுள்ளார். ஆகையால், ஜூன் 20 திங்களன்று ஆஜராவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. 


அமலாக்கத்துறை சம்மன்:


நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கடந்த 5ஆம் தேதியும் ராகுல் காந்தி 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பால் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் கூடுதல் அவகாசம் கேட்டார். இதையடுத்து அவருக்கு ஜூன் 13ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். ஆஜராவதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடை பேரணியாக வந்தார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், ராகுல் காந்தி காரில் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். 






முதல் நாளன்று, அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை ராகுல் காந்தியும், பிரியா காந்தியும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இரண்டாம் நாளில் சற்று குறைவான நேரம் விசாரணை நடந்தது. மூன்றாவது நாள் விசாரணைக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர்.


வழக்கு:


நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு  மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தியும் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜராகிவிட்டார். தற்போது தாயின் சிகிச்சைக்காக ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார்.