டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி ட்வீட்:


பாலியல் சீண்டல் தொடர்பாக டெல்லியல் நியாயம் கேட்டு போராடிய மல்யுத்த வீரர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இந்தக் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” முடிசூடும் விழா முடிந்தது; மக்களின் குரல்களின் நசுக்கும் பணி தொடங்கியது!” என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.




பிரச்சனை என்ன?


சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






பேரணியாக சென்ற வீரர் & வீராங்கனைகள்:


தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும்,  பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பேரணியாக சென்றனர்.