காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், 146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் இன்று முடிவுக்கு வந்தது. இந்த நடைபயணத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.
தமிழ்நாட்டில் நடைபயணம் நடந்தபோது, ராகுல் காந்தியிடம் பேசிய சில மூதாட்டிகள், அவருக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக கூறிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதேபோல, கர்நாடகாவில் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி ஷூ லேஸ் கட்டிய சம்பவம், பொது கூட்ட மேடையிலேயே சகோதரி பிரியங்கா காந்தி கன்னத்தில் ராகுல் காந்தி முத்திமிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதன் தொடர்ச்சியாக, நடைபயணத்தின் இறுதி நாள் அன்று பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் குழந்தைகள் போல விளையாடிய சம்பவம் அனைவரின் மனதையும் ஈர்த்துள்ளது.
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை தூக்கி போட்டு விளையாடினர். இதை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் கைகளை தட்டி மகிழ்ந்தனர்.
திருட்டுத்தனமாக பனிக்கட்டிகளை கைகளில் மறைத்து எடுத்து சென்ற ராகுல் காந்தி, எதிர் பாராத சமயத்தில் பிரியங்காவின் தலையில் போட்டு உடைத்தார்.
இதையடுத்து, ஓடி சென்று ராகுல் காந்தியின் தலையில் பிரியங்கா காந்தி பனிக்கட்டிகளை உடைக்கிறார். பின்னர், இருவரும் சேர்ந்து குழந்தைகள் போல ஆடி மகிழ்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் 12 எதிர்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடைபயணத்தின் இறுதி நாளில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது.