சந்திப்பு:


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சோனியா காந்தியை அவரது மகனான ராகுல் காந்தியும், அவரது மகளான பிரியங்கா காந்தியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.






அமலாக்கத்துறை சம்மன்:


நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கடந்த 5ஆம் தேதியும் ராகுல் காந்தி 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பால் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் கூடுதல் அவகாசம் கேட்டார். இதையடுத்து அவருக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.


ராகுல் காந்தி ஆஜர்:


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். ஆஜராவதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடை பேரணியாக வந்தார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், ராகுல் காந்தி காரில் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் நடத்தப்படும் விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 






விசாரணை:


ஆஜரான ராகுல் காந்தியிடம் சுமார் 3 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை ராகுல் காந்தியும், பிரியா காந்தியும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 


மீண்டும் விசாரணை: 




சோனியா காந்தியை சந்தித்த ராகுல் காந்தி மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்