Rajiv Gandhi Death Anniversary: மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் 33வது நினைவு தினத்தையொட்டி, ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


ராஜிவ் காந்தி நினைவு நாள் - ராகுல் காந்தி டிவீட்:


மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி 33 ஆண்டுகளுக்கு முன்பாக, இதேநாளில் தான் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாளையொட்டி, ராஜிவ் காந்தியின் மகனான, ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், ”அப்பா, உங்கள் கனவுகள், என் கனவுகள்.. உங்களது அபிலாஷைகளே எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள், இன்றும் என்றும், எப்போதும் என் இதயத்தில் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.


அதோடு, குழந்தை பருவத்தில் விமான நிலையத்தில் தனது தந்தையுடன் இருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.






ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை:


முன்னதாக, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தையொட்ட்,  டெல்லி வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர்.






தமிழக காங்கிரஸ் மரியாதை:


சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி புகைப்படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான, மே 21 தீவிரவாத எதிர்ப்பு தினமாக  ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


ராஜிவ் காந்தி படுகொலை:


மக்களவை தேர்தல் பரப்புரைக்காக, கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர்.