Rahul Gandhi: இந்திய ஒற்றுமை பயணத்தின் போது சிறுவனுடன் புஷ் அப் சேலஞ்ச் செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார்.
தற்போது ராகுல் காந்தி கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடை பயணம் மேற்கொண்ட போது ஒரு சிறுவன் ராகுல் காந்தியை தன்னுடன் புஷ் - அப் செய்யுமாறு போட்டிக்கு அழைத்தார். சிறுவனின் அழைப்பினை ஏற்ற ராகுல் காந்தி, உடனே தான் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போதே புஷ் - அப் செய்தார். ராகுல் காந்தியுடன் சேர்ந்து அவருடன் நடை பயணம் மேற்கொண்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் உட்பட மற்றவர்களும் இணைந்து புஷ் - அப் செய்தனர். புஷ் - அப் செய்து முடித்ததும், ராகுல் காந்தி அந்த சிறுவனை கை கொடுத்து வாழ்த்தினார். அந்த சிறுவனும் புஷ் - அப் செய்து முடித்ததும் ராகுல் காந்தியுடன் நடை பயணத்தினை தொடர்ந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில், பல்வேறு கல்வி நிலையங்களின் பிரிதிநிதிகளையும் ஆசிரியர்களையும் நேற்று ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது, இந்தி தேசிய மொழியாக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்தியை மட்டும் 'தேசிய மொழி' ஆக்கி, கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை" என்றார்.
இந்தியா முழுமைக்கும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ள ராகுல் காந்தியின் நடை பயணத்தில் ஒருநாள் கலந்து கொள்ளும்படியும், நாட்டை மதவாத சக்திகளிடம் இருந்து காக்க பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறும் லாலு பிரசாத்க்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக லாலு பிரசாத், இந்தியாவைக் காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.