காசிரங்கா பூங்காவில் சாலையைக் கடக்க முயன்று அடிபட்டுத் துடித்த காண்டாமிருகத்தின் சமீபத்திய வீடியோவை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தன் ட்விட்டர் பக்கத்தில் முன்னதாகப் பகிர்ந்துள்ளார்.


காசிரங்கா பூங்காவில் அடிபட்டுத் துடித்த காண்டாமிருகம்


அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவில் முன்னதாக டிரக்கும் காண்டாமிருகமும் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான சிசி டிவி காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.


வேகமாக வந்த டிரக் உடன் காண்டாமிருகம் மோதியதில், காண்டாமிருகம் அடிபட்டு சுற்றியவாறு மீண்டும் காட்டுக்குள் ஓடுகிறது.


நாட்டின் புகழ்பெற்ற தேசியப் பூங்காவான காசிராங்கா பூங்காவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 






குறிப்பாக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இந்த காசிரங்கா பூங்காவில் பாதுகாக்கப்படும்  பிரதான விலங்குகளாக விளங்கும் நிலையில், வன விலங்கு ஆர்வலர்களும், நெட்டிசன்களும் இச்சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வீடியோ பகிர்ந்த முதலமைச்சர்


இந்நிலையில், இந்த காண்டாமிருகத்தின் சமீபத்திய வீடியோவைப் பகிர்ந்துள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா அடிபட்ட காண்டாமிருகம் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், விலங்குகள் நடமாடும் பகுதிகளைக் கடக்கும்போது மெதுவாக வாகனத்தை ஓட்டுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


“அவசர அறிவிப்பு: சமீபத்தில் ஹல்திபாரியில் விபத்தை சந்தித்த எங்களின் காண்டாமிருக நண்பர், சிறப்பாக உள்ளார்.


இன்று காலை எடுக்கப்பட்டுள்ள ட்ரோன் வீடியோவை நான் பகிர்கிறேன். விலங்குகளிடம் கருணை காட்ட அனைவரையும் வலியுறுத்துகிறேன். விலங்குகள் கடக்கக்கூடிய பாதைகள் வழியாகச் செல்லும்போது மெதுவாகச் செல்லுங்கள்” என்று ஹிமந்தா பிஸ்வா ட்வீட் செய்துள்ளார்.






முதலமைச்சர் கண்டனம்


நேற்று முன் தினம் (அக்.10) ஹிமந்தா பிஸ்வா இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, காண்டாமிருகங்களின் பாதுகாப்பு இடங்களில் எந்த மீறலையும் அரசாங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.


காசிரங்கா பூங்கா பகுதி. யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் காசிரங்காவில் உள்ள விலங்குகளைக் காப்பாற்ற 32 கிமீ உயரமான தாழ்வாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார்.